நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” யோவேல் 2: 12

லெந்து காலங்கள் ஆதித்திருச்சபையிலே புதிய விசுவாசிகளை ஈஸ்டர் நாளன்று திருமுழுக்கு கொடுக்க ஆயத்தம் செய்ய பயன்படுத்தப்பட்ட நாட்கள். சாம்பல் புதனிலிருந்து புனித சனிக்கிழமை வரையுள்ள நாற்பது நாள் (6 ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) ஜெபத்தோடும் உபவாசத்தோடும் இருந்து கிறிஸ்தவ உபதேச சத்தியங்களை கற்றுக்கொள்ளுகின்ற காலமாய் ஆதித்திருச்சபையின் புதிய விசுவாசிகளுக்கு இருந்தது. திருச்சபையின் இந்த பாரம்பரியம் நம்முடைய ஆவிக்குரிய புத்தெழுச்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பலர் லெந்துகாலங்கள் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி அதை அனுசரிக்கத் தவறுகின்றனர். ஆனால் யோவேல் புத்தகத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை அழைப்பதைப்போல நாமும் இந்த நாட்களிலே நம்மை சுய பரிசோதனை செய்ய நேரம் எடுத்து இந்தக் காலங்களைப் பயன்படுத்தும்போது, இது நம் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாயிருக்கும். பயனுள்ள இப்படிப்பட்ட திருச்சபையின் பாரம்பரியங்களை நாம் கேள்விக்கேட்கும்போது, ஆதித்திருச்சபையோடு நமக்கிருகின்ற வரலாற்று தொடர்பை துண்டித்து விடுகிறோம்.

இந்த லெந்து காலங்கள் இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுந்த நாட்களை அனுசரிப்பதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்றது. நம்முடைய பிரியமான காரியங்களை நாம் இந்த லெந்துநாட்களில் தியாகம் செய்யாமல் எப்படி தேவக்குமாரனின் சிலுவை தியாகத்தை புரிந்துக்கொள்ள முடியும்? இயேசுவின் வாழ்க்கை மற்றும் இந்த உலகத்திற்கு அவர் வந்த நோக்கத்தைக் குறித்த தியானம், ஜெபத்தில் அதிகநேரம் தரித்திருந்து அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பது மற்றும் உபவாசத்தோடு நமக்குப் பிடித்தவைகளை விட்டுக்கொடுத்து இயேசு இந்த உலகிற்கு வருவதற்கு பரலோக மகிமையை விட்டார் என்பதை உணர்வது இந்த லெந்துகாலங்களை நம் ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜினமானதாய் மாற்றுகிறது.

லெந்துகாலங்கள் நாம் உலகளாவிய விசுவாசிகளோடு இணைந்து நம் ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள ஆண்டவர் கொடுக்கின்ற அழைப்பாக நினைத்து நம்முடைய சொந்த திருச்சபையின் பிள்ளைகளோடு இணைந்து விசேஷித்த ஜெபக்கூட்டங்களில் பங்கேற்று தேவனுடைய சரீரமாக வளருவதற்க்கான வாய்ப்பாக நினைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இது ஆவிக்குரிய ஒழுக்கங்களான உபவாசத்தோடும் ஜெபத்தோடும் நம் ஆண்டவரின் ஐக்கியத்தில் வளருகின்ற நேரமாக இருக்கிறது. நாம் யோவேலின் வார்த்தைகளைப் பின்பற்றுவோம்: “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள்” (யோவேல் 2: 13).