ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படி செய்தது.” 1 கொரி 15: 10

பவுல் தன்னுடைய வாழ்விலே கடவுள் பாராட்டின கிருபையைக்குறித்து இங்கு சொல்லி அதோடு தானும் ஊழியப்பாதையில் கடினமாக உழைத்ததாகக் கூறுகிறார். இப்படி சொல்வதன் மூலமாக நம் வாழ்வில் ஊழியம், குடும்பம் மற்றும் வேலை போன்ற எல்லாப் பகுதிகளிலும் எப்படி வெற்றிப்பெற முடியும் என்று காட்டுகிறார்.

பவுல் தேவனால் அசாதாரண முறையிலே இயேசு கிறிஸ்துவின் மூலமாக கிருபையினால் இரட்சிக்கப்பட்டார். எந்த மனிதனும் அதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. தேவனுடைய கிருபை பவுலின் வாழ்வில் அதிகமாய் காணப்பட்டது. அவர் சொல்லுகிறார், பிரதான பாவியாக இருந்தபோதிலும் தேவன் அவரை தெரிந்துக்கொண்டு தன்னுடைய நீடிய பொறுமையை காட்டினார் என்று (1 தீமோ 1: 16).

அதோடு கூட பவுலும் தேவனை அறிவதற்கும் பின்பு ஊழியத்தை நிறைவேற்றுவதற்கும் தன்னுடைய முழு பெலத்தோடு முயற்சி செய்ய வேண்டியதாயிருந்தது. மூன்று நாட்கள் கண் தெரியாமல் போராடிய பின்புதான் அனனியாவின் முலம் அடுத்து என்ன செய்வது என்று தெரிந்தது (அப் 9: 9). ஊழியத்தை துவங்குவதற்குமுன் மூன்று ஆண்டுகள் தன்னை ஆயத்தம் செய்ய வேண்டியதாயிருந்தது (கலா 1: 18). அவருடைய ஊழியமும் கஷ்டங்களால் நிறைந்திருந்தன (2 கொரி 6: 3-5). அவர் தன்னை போஷித்துக்கொள்ளவும் ஊழியத்தை நிறைவேற்றவும் கூடாரம் செய்யும் வேலையை செய்ய வேண்டியதாயிருந்தது (அப் 18: 3).
பவுலின் வெற்றி சுலபமானதாயில்லை. தனக்கு கிடைத்த தேவக்கிருபையை பிரயோஜனப்படுத்திக் கொண்டார். அதனால்தான் அவர் “அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை” என்று சொல்லுகிறார்.

ஆண்டவரின் கிருபையோடு கடின உழைப்பும்; சேர்ந்து பவுலின் வாழ்விலும் ஊழியத்திலும் வெற்றியைக் கொடுத்தது!

கிறிஸ்தவர்கள் எந்தப்பக்கத்திலும் அதிகமாய் சாயக்கூடாது. ஒரு பக்கத்திலே நம்முடைய பொறுப்பை மறந்து கடவுளை குறை சொல்லுவதையும் மறு பக்கத்திலே கடவுளின் கிருபையை மறந்து எல்லா வெற்றிக்கும் நாம் தான் காரணம் என்றும் கூறுவதையும் தவிர்க்கவேண்டும். நாம் செய்யவேண்டிய காரியங்களை கவனத்தோடு தேவக்கிருபையை பயன்படுத்தி செய்யவேண்டும். அதே சமயத்தில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரியங்களை கடவுளின் கரத்தில் விட்டுவிடவேண்டும்.

கடவுளின் கிருபை + கடின உழைப்பு = வாழ்வின் வெற்றி